சங்கீதம் - 29 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 11 வரை

சங்கீதம் 29:1

தேவ புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதம் 29:3

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

சங்கீதம் 29:4

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

சங்கீதம் 29:5

கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

சங்கீதம் 29:6

அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

சங்கீதம் 29:7

கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும்.

சங்கீதம் 29:8

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

சங்கீதம் 29:9

கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் “கர்த்தருக்கு மகிமை” என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

சங்கீதம் 29:10

கர்த்தர் ஜலப்பிரளயத்தின்மேல் வீற்றிருந்தார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

சங்கீதம் 29:11

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.