சங்கீதம் - 105 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 45 வரை

சங்கீதம் 105:1

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.

சங்கீதம் 105:2

அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

சங்கீதம் 105:3

அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

சங்கீதம் 105:4

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

சங்கீதம் 105:5

அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

சங்கீதம் 105:6

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

சங்கீதம் 105:7

அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

சங்கீதம் 105:8

ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

சங்கீதம் 105:9

அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார்.

சங்கீதம் 105:10

அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்தியஉடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:

சங்கீதம் 105:11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

சங்கீதம் 105:12

அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

சங்கீதம் 105:13

அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

சங்கீதம் 105:14

அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

சங்கீதம் 105:15

நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.

சங்கீதம் 105:16

அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.

சங்கீதம் 105:17

அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.

சங்கீதம் 105:18

அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.

சங்கீதம் 105:19

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

சங்கீதம் 105:20

ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

சங்கீதம் 105:21

தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும்,

சங்கீதம் 105:22

அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.

சங்கீதம் 105:23

அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

சங்கீதம் 105:24

அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

சங்கீதம் 105:25

தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

சங்கீதம் 105:26

தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

சங்கீதம் 105:27

இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

சங்கீதம் 105:28

அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

சங்கீதம் 105:29

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

சங்கீதம் 105:30

அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.

சங்கீதம் 105:31

அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

சங்கீதம் 105:32

அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.

சங்கீதம் 105:33

அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.

சங்கீதம் 105:34

அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

சங்கீதம் 105:35

அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.

சங்கீதம் 105:36

அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

சங்கீதம் 105:37

அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.

சங்கீதம் 105:38

எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.

சங்கீதம் 105:39

அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார்.

சங்கீதம் 105:40

கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.

சங்கீதம் 105:41

கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.

சங்கீதம் 105:42

அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

சங்கீதம் 105:43

தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி,

சங்கீதம் 105:44

தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

சங்கீதம் 105:45

அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.