லேவியராகமம் - 21 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 24 வரை

லேவியராகமம் 21:1

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல்.

லேவியராகமம் 21:2

தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,

லேவியராகமம் 21:3

புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.

லேவியராகமம் 21:4

தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.

லேவியராகமம் 21:5

அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.

லேவியராகமம் 21:6

தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.

லேவியராகமம் 21:7

அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.

லேவியராகமம் 21:8

அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.

லேவியராகமம் 21:9

ஆசாரியனுடைய குமாரத்தி, வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.

லேவியராகமம் 21:10

தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,

லேவியராகமம் 21:11

பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

லேவியராகமம் 21:12

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

லேவியராகமம் 21:13

கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.

லேவியராகமம் 21:14

விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.

லேவியராகமம் 21:15

அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21:16

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியராகமம் 21:17

நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.

லேவியராகமம் 21:18

அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,

லேவியராகமம் 21:19

காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,

லேவியராகமம் 21:20

கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.

லேவியராகமம் 21:21

ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.

லேவியராகமம் 21:22

அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.

லேவியராகமம் 21:23

ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21:24

மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.