யோபு - 33 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 33 வரை

யோபு 33:1

யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.

யோபு 33:2

இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.

யோபு 33:3

என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.

யோபு 33:4

தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.

யோபு 33:5

உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.

யோபு 33:6

இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.

யோபு 33:7

இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.

யோபு 33:8

நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:

யோபு 33:9

நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.

யோபு 33:10

இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.

யோபு 33:11

அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.

யோபு 33:12

இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.

யோபு 33:13

அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?

யோபு 33:14

தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

யோபு 33:15

கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,

யோபு 33:16

அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,

யோபு 33:17

மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.

யோபு 33:18

இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.

யோபு 33:19

அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.

யோபு 33:20

அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்,

யோபு 33:21

அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.

யோபு 33:22

அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.

யோபு 33:23

ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,

யோபு 33:24

அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.

யோபு 33:25

அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.

யோபு 33:26

அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

யோபு 33:27

அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.

யோபு 33:28

என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.

யோபு 33:29

இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,

யோபு 33:30

அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.

யோபு 33:31

யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.

யோபு 33:32

சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.

யோபு 33:33

ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.